ஆசியாவில் வீசா கட்டணங்கள் மிகவும் அதிகமான நாடாக இலங்கை திகழ்கின்றது என சுற்றுலாத்துறை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வீசா கட்டண அதிகரிப்பு மற்றும் சிக்கலான வீசா வழங்கும் நடைமுறை குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் சுற்றுலாத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.
வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட சுற்றுலா நாடுகள் பலவற்றில் வீசா கட்டணங்கள் இன்றி அல்லது மிகக் குறைந்த தொகை அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஆறு மாத காலங்களுக்கான பல்நுழைவு (six-month multiple-entry visa) வீசா கட்டணம் 100.77 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் குடும்பங்களாக சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கட்டண அதிகரிப்பினால் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வீசா கட்டணமாக சுமார் 400 டொலர்களை செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இணைய வழியில் இலத்திரனியல் பயண அனுமதி (Electronic Travel Authorization) முறைமை காணப்பட்டதாகவும் இது எளிமையானதும் செலவு குறைந்ததுமான முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பினை வழங்கும் சுற்றுலாத்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், வீசா கட்டணம் மற்றும் வீசா விநியோக நடைமுறைகள் காரணமாக எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.