ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அடிக்கடி விமானப் பயணங்களை ரத்து செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 1ம் திகதி லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று வியன்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
272 பயணிகளுடன் லண்டன் நோக்கிப் பயணித்த யூ.எல். 503 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட நோய் நிலைமையினால் இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எனினும் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் லண்டன் நோக்கிப் புறப்படுவது மேலும் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமானம் 2ம் திகதியே வியன்னாவிலிருந்து புறப்பட்டதாகவும், பயணிகள் வியன்னாவில் தங்க வைக்கப்பட்டதாகவும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமான தாமதம் காரணமாக லண்டனிலிருந்து புறப்படவிருந்த யூ.எல்.504 விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைக் காலமாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான பல விமானங்கள் இவ்வாறு ரத்து செய்யப்படுவதாகவும் பயண நேரம் மாற்றப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.