கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் வீசா வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள VFS Global நிறுவனம் எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு சேவையை வழங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் VFS Global நிறுவனம் விமான நிலையத்தில் ஒன் அரைவல் வீசா வழங்கி வருகின்றது.
புதிய வீசா வழங்கும் நடைமுறையை VFS Global நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவையினதும், நாடாளுமன்றினதும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் 30 நாட்கள் ஒன் அரைவில் சிங்கள் வீசா ( 30-day single arrival visa) திட்டம் மட்டுமே காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 நாட்களுக்கான ஒன் அரைவல் வீசாவிற்கு 50 டொலர்கள் அறவீடு செய்யும் நடைமுறை நாளைய தினம் முதல் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடிய ஆறு மாத கால வீசா காலம் கொண்ட வீசாவிற்கு 75 டொலர்கள் அறவீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வீ.எப்.எஸ் நிறுவனத்தினால் வீசாவை நிராகரிக்கவோ அல்லது வழங்கவோ முடியாது எனவும் அந்த நிறுவனம் ஆவணங்களை பரிசீலனை செய்ய மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவணங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டதன் பின்னர் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் அனுமதி வழங்குதல் அல்லது நிராகரிக்கும் தீர்மானத்தை எடுப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை மனுக் கோரல் அடிப்படையில் வீ.எப்.எஸ் நிறுவனம் தெரிவு செய்யப்படவில்லை எனவும், அவர்களின் திட்ட முன்மொழிவின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.