சுவிட்சர்லாந்தின் தொழிற்சந்தையில் பாரியளவு தட்டுப்பாட்டு நிலை உருவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2040ம் ஆண்டளவில் நாட்டின் தொழிற்சந்தையில் பல ஆயிரம் தொழில் வெற்றிடங்கள் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் ரயில் சேவை மற்றும் வைத்தியசாலைகளை நடாத்திச் செல்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் நாட்டில் இவ்வாறு ஆளணி வளத்தட்டுப்பாட்டு நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் வெற்றிடங்களுக்கு அதிகளவு கிராக்கி நிலவி வருவதனால் பல நிறுவனங்கள் ஆட்களை பணிக்கு அமர்த்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டு நிறைவில் சுமார் 110000 பதவி வெற்றிடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சனத்தொகை பரம்பலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் காரணமாக எதிர்வரும் 2040ம் ஆண்டளவில் சுவிட்சர்லாந்தில் சுமார் 430000 பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.