நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் விமானங்கள் காற்றுக் கொந்தளிப்பு நிலைமைகளை சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்குகின்றன.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காற்று கொந்தளிப்பு விமானங்களை எவ்வாறு தாக்குகின்றன இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விமானங்கள் காற்று கொந்தளிப்பில் சிக்கினாலும் பயணிகளுக்கு காயங்கள் ஏற்படுவதோ அல்லது விமானத்திற்கு சேதம் ஏற்படுவதோ மிகவம் அரிது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதனால் காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றது என்பதனை புரிந்து கொள்வது விமானப் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உதவியாக அமையக் கூடும்.
வர்த்தக விமானங்களில் காற்றுக்கொந்தளிப்பு காரணமாக மரணங்கள் பதிவாவது மிகவும் அரிதானது. எனினும் சிங்கப்பூர் விமானத்தில் இவ்வாறு மரணம் பதிவாகியுள்ளது என பிரித்தானியரின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் வளிமண்டலவியல் விஞ்ஞான பேராசிரியர் போல் வில்லியம்ஸ் (Paul Williams) ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
காற்று கொந்தளிப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகின்றது?
காற்றின் சமனிலை பாதிக்கப்படும் நிலைமை காற்று கொந்தளிப்பு எனப்படுகின்றது. வானில் சில பகுதிகளில் வெற்றிடங்கள் நிலவும் போது இவ்வாறு காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றது.
காற்று கொந்தளிப்பினை சிறிய, நடுத்தர, கடுமையான மற்றும் மிகக் கடுமையான என நான்கு பிரிவுகளாக வகையீடு செய்ய முடியும்.
சிறிய மற்றும் நடுத்தர காற்றுக் கொந்தளிப்பின் போது பயணிகள் தங்களது இருக்கைப் பட்டிகளின் ஊடாக அழுத்தத்தை உணர்வார்கள் என்பதுடன், விமானத்தில் பாதுகாப்பற்ற பொருட்கள் அசைவதனை அவதானிக்க முடியும்.
எனினும், கடுமையான காற்று கொந்தளிப்புக்களின் போது பயணிகள் விமானத்தில் தூக்கி எறியப்படலாம் இதனால் காயங்கள் சில வேளைகளில் மரணம் ஏற்படலாம்.
பலத்த காற்று, மலைப் பகுதிகள் மற்றும் வலுவான வளியோட்டம் காரணமாக காற்று கொந்தளிப்பு ஏற்படலாம் என பேராசிரியர் வில்லியம்ஸ் குறிப்பிடுகின்றார்.
வளியோட்டங்களை வானிலை ராடர்களின் ஊடாக முன்கூட்டியே கண்டுகொள்ள முடியாது, அவை ராடார்களுக்கு தென்படுவதில்லை.
வளிமண்டல அழுத்தம் காரணமாக வளியோட்டம் ஏற்படுகின்றது.
மலைப் பகுதிகளைச் சுற்றியிருக்கும் காற்றில் ஏற்படக்கூடிய மாற்றம், குளிர் அல்லது சூடான காலநிலை, இடிமின்புயல் போன்ற பகுதிகளில் விமானப் பறக்கும் போது இவ்வாறு காற்று கொந்தளிப்பில் சிக்க நேரிடுகின்றது.
காற்று கொந்தளிப்பு நிலைமைகள் குறித்து விமானிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படும். எனினும் சில சந்தர்ப்பங்களில் முன்னெச்சரிக்கை இன்றியும் இவ்வாறான கொந்தளிப்பு நிலைமைகள் ஏற்படக் கூடும்.
காற்று கொந்தளிப்பு எவ்வளவு ஆபத்தானது
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் 30 பயணிகளும் 116 விமானப் பணியாளர்களும் காற்றுக் கொந்தளிப்பு காரணமாக படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருடமொன்றுக்கு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 4 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி கொந்தளிப்பில் சிக்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது.
வர்த்தக விமானங்களில் அதிகளவு இடம்பெறும் விபத்துக்களாக இந்த காற்று கொந்தளிப்பு நிலைமையை குறிப்பிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காற்று கொந்தளிப்பினால் ஏற்படக்கூடிய சிறு காயங்கள் தொடர்பான பதிவுகள் இல்லாத காரணத்தினால் காயமடைந்தோர் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை.
சிங்கப்பூர் விமான சேவை விமானத்தில் இடம்பெற்றது போன்று காற்று கொந்தளிப்பு மரணங்கள் மிகவும் அரிதானவை.
கடந்த 2023ம் ஆண்டில் முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தனியார் ஜெட்டில் பயணித்த போது ஏற்பட்ட காற்று கொந்தளிப்பில் உயிரிழந்தார்.
1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் காற்று கொந்தளிப்பு காரணமாக அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இவ்வாறு மரணம் பதிவாகியிருந்தது.
காற்று கொந்தளிப்பினை தடுக்க விமான சேவை நிறுவனங்கள் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகின்றது.
காற்று கொந்தளிப்புக்களினால் வருடமொன்றுக்கு அமெரிக்க விமான சேவைத் துறைக்கு மட்டும் 150 முதல் 500 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுகின்றது.
காற்று கொந்தளிப்புக்கள் மோசமடைகின்றனவா?
கடந்த நான்கு தசாப்த காலத்தில் காற்று கொந்தளிப்பு நிலைமைகள் சுமார் 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரீடிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் இவ்வாறு காற்று கொந்தளிப்புக்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1979ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியல் உலகின் அதிகளவு விமான போக்குவரத்து இடம்பெறும் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் 55 வீதத்தினால் காற்று கொந்தளிப்பு நிலை அதிகரித்துள்ளது.
எதிர்வரும் தசாப்தங்களில் காற்று கொந்தளிப்புக்கள் இரண்டு மூன்றாக அதிகரிக்கக் கூடும் என பேராசிரியர் வில்லியம்ஸ் கூறுகின்றார்.
தெளிவான காற்றுக் கொந்தளிப்பு திடீரென தாக்குவதனால் இதனை தவிர்ப்பது சிரமம் என அவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் காற்று கொந்தளிப்பு குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்றி 28 வீதமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பத்து நிமிடங்கள் நீடிக்கும் காற்று கொந்தளிப்பு நிலைமை இன்னும் சில தசாப்தங்களில் இருபது சில நேரங்களில் அரை மணித்தியாலங்கள் வரையில் நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் கழிப்பறைக்கு செல்லும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நாம் இருக்கை பட்டி அணிய வேண்டுமா?
இதற்கு குறுகிய பதில் வழங்க வேண்டுமாயின் ஆம். காற்று கொந்தளிப்பில் காயமடைந்த அநேகர் இருக்கை பட்டி அணியாதவர்களாவர்.
எப்பொழுது காற்று கொந்தளிப்பு ஏற்படும் எனத் தெரியாத காரணத்தினால் ஒட்டு மொத்த பயணத்தின் போதும் இருக்கை பட்டி அணிந்திருப்பது பாதுகாப்பானது.
காற்று கொந்தளிப்பு விமானத்தை சேதப்படுத்துமா?
கடுமையான காற்று கொந்தளிப்பு நிலைமைகளின் போது விமானம் தூக்கி எறியப்படும், இந்த நேரத்தில் விமானத்தை கட்டுப்படுத்த முடியாது. சில வேளைகளில் விமானத்திற்கு அமைப்பு ரீதியான சேதங்கள் ஏற்படக் கூடும். விமான கட்டுப்பாட்டு அறையும் மோசமாக சேதமடையக் கூடும்.
சில பாதைகளில் அதிகளவு காற்று கொந்தளிப்பு ஏற்படுகின்றதா?
காற்று கொந்தளிப்பு எந்த நேரத்திலும் எந்த உயரத்திலும் ஏற்படக் கூடும். எனினும் சில இடங்களில் இவ்வாறான கொந்தளிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சில்லி மற்றும் பொலியாவிற்கு இடையிலான விமானப் பயணங்களின் போது கூடுதல் ஆபத்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.