பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி இது தொடர்பில் அறிவித்துள்ளது.
நாட்டில் இடம் பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு தரப்புகள் கல்வி நிறுவனங்களில் மேற்கொண்டுள்ள முற்றுகையானது சட்டத்திற்கு புறம்பானது என மக்கள் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பூரண கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பலஸ்தீன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களில் இடம் பெற்று வரும் போராட்டங்களில் பின்னணியில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து மக்கள் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்த பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன? எவ்வாறு இதன் திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்த தகவல்கள் கண்டறியப்பட வேண்டும் என கட்சி மேலும் வலியுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பல்வகைமை மற்றும் மிதவாத கொள்கைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து அரசாங்கம் விளக்க வேண்டும் என மேலும் கோரப்பட்டுள்ளது.