வீ.எப்.எஸ் நிறுவனத்திற்கு வீசா கொடுக்கல் வாங்கல் விவகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு முரணானது என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மருந்துப் பொருள் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று வீசா மோசடி தொடர்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
ஒன் அரைவல் வீசா வழங்குவது தொடர்பில் சரியான ஆய்வுகளை நடத்தி இந்த திட்டத்தை இலங்கையின் மொபிடெல் நிறுவனம் முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
வீசா வழங்கும் செயன்முறையை அரசாங்கத்திற்கு சொந்தமான மொபிடெல் நிறுவனத்திற்கு வழங்குமாறு நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளுக்கும், நல்லாட்சி கொள்கைகளுக்கும் முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வீசா வழங்கும் நடவடிக்கையை வெளிநாட்டு தரப்பிற்கு வழங்கியமையானது நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீ.எப்.எஸ் நிறுவனத்திற்கு வீசா வழங்கும் பொறுப்பு வழங்கியதனால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.