அண்மைக் காலமாக காற்று கொந்தளிப்புச் ( turbulence) சம்பவங்கள் அதிகரித்தச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் ஏற்பட்ட காற்று கொந்தளிப்புச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டாரின் தலைநகர் டோஹாவிலிருந்து டப்ளின் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானமொன்று இவ்வாறு காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆறு பயணிகளும், ஆறு விமான பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான க்யூ.ஆர்.107 (QR107) என்ற விமானமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
துருக்கிக்கு மேல் பறந்து கொண்டிருந்த வேளையில் இவ்வாறு காற்று கொந்தளிப்பில் விமானம் சிக்கியுள்ளது.
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பயணிகளினதும் பணியாளர்களினதும் பாதுகாப்பு உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று காற்று கொந்தளிப்புக்கு உள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 104 பேர் காயமடைந்திருந்தனர்.
தற்பொழுது காற்று கொந்தளிப்புச் சமப்வங்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் வருடாந்தம் சுமார் 65000 விமானங்கள் காற்று கொந்தளிப்பினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 5500 விமானங்கள் கூடுதல் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் காற்று கொந்தளிப்பு சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனவும், எதிர்வரும் தசாப்தங்களில் காற்று கொந்தளிப்பு நிலைமைகள் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டார் விமான சேவை நிறுவன விமானம் எவ்வாறான காற்று கொந்தளிப்பு நிலைமையை எதிர்நோக்கியது என்பது பற்றிய விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் இதுவரையில் பூரண தகவல்கள் கண்டறியப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் காற்று கொந்தளிப்புச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.