அண்மையில் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சுமார் 178 அடிகள் கீழே இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி தகவல்கள் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
சுமார் ஐந்து செக்கன் வரையில் காற்றுக் கொந்தளிப்பு தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காற்று கொந்தளிப்பில் சிக்கிய விமானம் மேலும் கீழும் வேகமாக குலுங்கியதாகவும், சுமார் 54 மீற்றர் வரையில் கீழே இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமான விபத்தில் ஒரு பிரித்தானிய பிரஜை கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது மியன்மார் வான் பரப்பில் இவ்வாறு காற்றுக் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த விமானம் தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் திடீரென மேலும் கீழும் குலுங்கிய காரணத்தினால் பயணிகள் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இருக்கை பட்டி அணியாதவர்களே அதிகளவில் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த வேளையில் காற்றுக் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காற்றுக் கொந்தளிப்பு தாக்கி சுமார் 17 நிமிடங்களின் பின்னரே விமானிகள் விமானத்தின் பூரண கட்டுப்பாட்டை உறுதி செய்து தாய்லாந்து நோக்கி விமானத்தை திசை திருப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ செலவுகளை ஈடு செய்வதற்கும் மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 26 பயணிகள் தொடர்ந்தும் தாய்லாந்தில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.