ஐரோப்பா மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் விமான கட்டணங்கள் வீழ்ச்சியடையும் போக்கு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் விமான பயணங்களில் அதிகரிப்பு பதிவாகி இருந்தது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் விமானப் பயணங்களுக்கான கேள்வி நிரம்பல் நிலைமையினால் பயணிகள் எண்ணிக்கை உயர்வும், கட்டண அதிகரிப்பும் பதிவாகியிருந்தது.
செலவு அதிகரிப்பு வரையறுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை போன்ற பிரச்சனைகளை அனேகமான விமான சேவை நிறுவனங்கள் எதிர் நோக்கின.
எனினும், தற்பொழுது எவ்வளவு தொகை கொடுத்தேனும் விமான பயணங்களை மேற்கொள்ளுதல் என்ற நிலைப்பாடு மாறி வருவதாக துறைசார் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில வாடிக்கையாளர்கள் விமான கட்டணங்களின் தொகை தொடர்பில் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாகவும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான கட்டணங்களின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் குறைவாக உயர்வடையும் என சிக்கன விமான சேவை நிறுவனமான ராயல் ஏர் விமான சேவையின் பிரதம நிறைவேற்ற அதிகாரி மைக்கேல் ஓ லெரி தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு பதிவாகாமமை சிறிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதற்கு, வாடிக்கையாளர்களின் தீர்மானமா அல்லது ஐரோப்பா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான உணர்வின் எதிரொலியா என்பது சரியாக தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு விமான கட்டணங்கள் ஒரு சீரான நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஆசிய பசிபிக் பிராந்திய வலய நாடுகளில் விமான கட்டணங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் விமான கட்டணங்கள் 16 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளன.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் கடந்த வாரம் பாரிய அளவிலான வருடாந்த லாபத்தை பதிவு செய்திருந்தது.
எனினும் நிறுவனத்தின் தேறிய லாப வளர்ச்சி யானது கடந்த மூன்று காலாண்டு பகுதிகளிலும் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் வசதிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எனினும் பயணிகளின் எண்ணிக்கை ஓரளவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றின் பின்னர் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் ஆசிய நாடுகள் காலம் தாமதித்த நிலைப்பாட்டை பின்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமான பயணங்களுக்கு கேள்வி, நிரம்பல் வழமைக்கு திரும்பும் எனவும் கட்டணங்கள் இந்த ஆண்டில் சாதாரண நிலையை அடையும் எனவும் ஹொங்கொங்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் கதே பசிபிக் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொனால்ட் லாம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பொருளாதார நிலைமைகள் காரணமாக சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்தும் வழமைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு முன்னைய காலத்தில் காணப்பட்ட சர்வதேச விமான பயணங்களுடன் ஒப்பீடு செய்யும் போது அதில் 70 வீதமான பயணங்களே தற்பொழுது முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா போன்ற பயணச் சந்தைகளில் சீனா வழங்கிய பங்களிப்பும் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மக்கள் பயணங்களுக்கு தொடர்ந்தும் முன்னுரிமை அளித்து வருவதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.