ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுடன் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
சில தசாப்தங்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட தற்போது ஆள் அடையாளத்தை உறுதி செய்ய முடியாத தேசிய அடையாள அட்டைகளுடன் கடுவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்வோருக்கு இனி கடவுச்சீட்டு வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்யும் போது ஆறு மாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட வர்ண புகைப்படங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அநேகமான விண்ணப்பதாரிகளின் தற்போதைய புகைப்படத்திற்கும் அடையாள அட்டையின் புகைப்படத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடையாளம் காண முடியாத புகைப்படங்கள், தெளிவற்ற விபரங்கள் உள்ளடக்கிய தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்போர் முதலில் தேசிய அடையாள அட்டையை புதுப்பித்துக் கொண்டு அதன்பின்னர் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் பத்தாண்டுகளாகும்.
குடிவரவு குடியகழ்வு கட்டமைப்பினை நவீன மயப்படுத்தியதன் பின்னர் காலாவதியான கடவுச்சீட்டுக்களை புதுப்பிப்பதற்கு விண்ணப்பங்களை மட்டும் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.