ஐரோப்பாவின் முன்னணி பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான எப்.ரீ.ஐ நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனம் கிரேக்கத்தில் ஹோட்டல்களுக்கு சுமார் இரண்டு மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எப்.ரீ.ஐ. நிறுவனம் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய சுற்றுலா பயண முகவர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் அறிவிப்பு பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியை மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாக ஜெர்மனியின் முனிச் நீதிமன்றில் அதிகாரபூர்வமாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
வங்குரோத்து நிலைமை காரணமாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணங்கள் இன்று முதல் ரத்து செய்யப்படும் எனவும் அல்லது பகுதி அளவில் பயணங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு நிதி நெருக்கடி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்கும் நோக்கில் தொலைபேசி சேவை ஒன்றையும் இணைய தள சேவையொன்றையும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது,
வங்குரோத்து அடைந்த நிறுவனத்தின் சொத்துக்களை அரசாங்கம் நியமான முறையில் விற்பனை செய்து கடன்களை செலுத்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்.ரீ.ஐ நிறுவனத்தில் சுமார் 11000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.