எப்.ரீ.ஐ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதாக சுவிஸ் பயண முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவின் முன்னணி பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான எப்.ரீ.ஐ நிறுவனம் வங்குரோத்து அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு உதவுவதாக உள்நாட்டு பயண முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்ட FTI Touristik நிறுவனம் இவ்வாறு வங்குரோத்து அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தின் சுவிஸ் வாடிக்கையாளர்கள் தாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள சுவிஸ் பயண முகவர் நிறுவனங்கள் உதவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று பயண ஏற்பாடுகள் அல்லது முற்பணக் கொடுப்பனவுகளை உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ள சுவிஸ் பயண முகவர் நிறுவனங்கள் உதவ உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து பயண ஒன்றியம் (Swiss Travel Association ) இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளது.
எப்.ரீ.ஐ பயண முகவர் நிறுவனத்திடம் சேவையை பெற்றுக்கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களின் பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பயண முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக எப்.ரீ.ஐ நிறுவனத்தில் பயணங்களை ஏற்பாடு செய்தவர்கள் தங்களது ரசீதுகள் அனைத்தும் கவனமாக உள்நாட்டு பயண முகவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு எப்.ரீ.ஐ நிறுவனத்தினால் பயண செலவுகள் ஏற்கப்படாத சுவிஸ் பயணிகள் இவ்வாறு ரசீதுகளை உள்நாட்டு பயண முகவர் நிறுவனத்திடம் ஒப்படைத்து செலவிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எப்.ரீ.ஐ நிறுவனத்தின் சுவிட்சர்லாந்து கிளை இதுவரையில் வங்குரோத்து அடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்.ரீ.ஐ நிறுவனம் வங்குரோத்து அடைந்த நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு சுவிட்சர்லாந்தின் உள்நாட்டு பயண முகவர் நிறுவனங்கள் பல்வேறு மாற்று பயண திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோடை காலத்தில் சுவிட்சர்லாந்து மக்கள் தடையின்றி தங்களது வெளிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ள உள்நாட்டு பயண முகவர் நிறுவனங்கள் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.