குறைந்த கலோரிகளை உடைய இனிப்பூட்டிகள் (low-calorie sweetener) உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நீரிழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த நாட்டம் காட்டுகின்றனர்.
இவ்வாறு நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விசேடமாக குறைந்த கலோரிகளை உடைய உணவு வகைகள் மற்றும் பல பொருட்கள் சந்தையில் காணப்படுகின்றன.
எவ்வாறு எனினும் குறைந்த கலோரிகளுடைய இனிப்பூட்டிகளுக்கு பயன்படுத்தும் சில பொருட்கள் மிகவும் ஆபத்தானவை என தெரிவிக்கப்படுகிறது.
எக்ஸ்ளிடோல் (xylitol) என்ற ஒரு வகை பொருள் அதிகளவான ஆபத்தைக் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மாரடைப்பு பக்கவாதம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் க்ளேவ் லேண்ட் கிளினிக் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஸ்டான்லி ஹாசின் இது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீனி பயன்படுத்தும் போது உடலின் குளுக்கோஸ் அளவு 10 முதல் 20 வீதம் அதிகரிக்கும் எனவும் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்காது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
எனினும் இந்த வகை சில இனிப்பூட்டிகளை பயன்படுத்தும் போது பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைந்த அளவு கலோரிகளை கொண்ட இனிப்பூட்டிகள் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடியவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களின் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது.