சுவிட்சர்லாந்தில் உரிமை கோரப்படாத சொத்துக்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வங்கிகளில் வைப்பு செய்த பணம் அல்லது வேறும் சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் அவை அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உரிமை கோரப்படாத 7.1 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்தின் மத்திய திறைசேரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத அல்லது உரிமை கோரப்படாத சந்தர்ப்பங்களில் சொத்துக்கள் இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பை பேணி வருகின்றது.
எனினும் சில சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் வெளிநாடு செல்லுதல் அல்லது மரணித்தல் போன்ற காரணிகளினால் அவர்களுடனான தொடர்பு இழக்கப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் வங்கி நாரியிலோ வழிகாட்டல்களின் (Narilo Guidelines) அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கின்றது.
வாடிக்கையாளருடன் தொடர்பற்று போன நிலையில் பல்வேறு வழிகளில் வங்கி தொடர்பினை ஏற்படுத்த முயற்சிக்கும் அவ்வாறான முயற்சிகள் தோல்வி அடைந்தால், வங்கியில் 500 பிராங்குகளுக்கு அதிகமான சொத்துக்கள் காணப்படும் போது அவை உரிமை கோரப்படாத சொத்துக்கள் என்ற அடிப்படையில் இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
60 ஆண்டுகள் வரையில் இவ்வாறு சொத்துக்களுக்கு உரிமை கோர சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
அறுபது ஆண்டுகள் வரையில் உரிமை கோரப்படாத சொத்துக்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு வெளியிடப்படும்.
மேலும் ஓராண்டு காலப்பகுதிக்குள் இந்த சொத்துக்கள் உரிமை கோரப்படாத நிலையில் அவை நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தொடர்பற்ற 2010 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தமாக 130.4 மில்லியன் பிராங்குகள் பெறுமதியான சொத்துக்கள் திறைசேரியில் சேர்க்கப்பட்டுள்ளது.