எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் மீது அமெரிக்கா அபராதம் விதித்துள்ளது.
மத்திய கிழக்கினை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு 1.6 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க போக்குவரத்து திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமானங்கள் ஈராக் நாட்டு வான் பரப்பில் தாழ்வாக விமானத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமானப் பயணங்களின் போது விமானம் ஈராக் பிராந்தியத்தில் தாழ்வாக பறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப் பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 2020ம் ஆண்டிலும் இதேவிதமான குற்றச்சாட்டுக்காக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க விமான சேவை நிறுவனங்களின் ஒன்றான ஜெட்புளு விமான சேவை நிறுவனம், எமிரேட்ஸ் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை செய்து கொண்டுள்ளது.
இதன்படி, எமிரேட்ஸ் விமானத்தின் ஆசனங்கள் ஜெட்புளு விமான சேவை நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் எமிரேட்ஸ் நிறுவனம் அமெரிக்க விமான பயண நியதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும்.
இதன்படி, ஈராக் வான் பரப்பில் அமெரிக்க விமானங்கள் 32000 அடிகளுக்கு கீழ் பறக்கக் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் சில் சந்தர்ப்பங்களில் எமிரேட்ஸ் நிறுவனம் விமானத்தை தாழ்வதாக செலுத்தியதாக குற்றம் சுமத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.