எயார் இந்தியா விமான சேவை நிறுவன்ம இந்தியாவின் டெல்லி நகருக்கும் – சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
போயிங் 787 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்கான பயணங்களுக்கு நிலவி வரும் அதிகளவான கேள்வியை கருத்திற் கொண்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எயார் இந்தியா விமான சேவை நிறுவனம், 140 விமானங்களின் மூலம் உலகின் சுமார் 40 இடங்களுக்கு விமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.
1997ம் ஆண்டிலிருந்து டெல்லி – சூரிச் நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்திற்கு நான்கு தடவைகள் இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிச் – டெல்லி விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
இரவு 8.50 மணிக்கு சூரிச்சிலிருந்து புறப்படும் இந்த விமானம் டெல்லியில் காலை 8.05 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளது.
டெல்லியிலிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்படும் விமானம் சூரிச்சில் 7.15 மணிக்கு தரையிறக்கப்பட உள்ளது.
எயார் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 விமானங்களில் 256 பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எயார் இந்தியாவின் டெல்லி – சூரிச் நேரடி விமான சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதுவர் மிரிடுல் குமார், சூரிச் விமான நிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முன்னணி விமான சேவை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.