இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவிருந்த இரண்டு விமானங்களை ஈரான் கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லித்துவேனியாவிலிருந்து இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கு புறப்பட்ட இரண்டு விமானங்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தற்பொழுது செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இரண்டு விமானங்களும் தங்களது பயண இலக்கினை அடையாது ஈரானிலேயே தரையிறக்கப்பட்டுள்ளன.
ஈரானிய வான் பரப்பிற்குள் பிரவேசித்த குறித்த இரண்டு விமானங்களினதும் விமான கட்டுப்பாட்டு சமிக்ஞைகள் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் எங்கு பறக்கின்றன என்பதை கண்டறிவதற்காக விமானங்களில் பொருத்தப்படும் ட்ரான்ஸ்பொன்டர்ஸ் இவ்வாறு நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள மெஹராபாட் விமான நிலையத்தில் ஒரு விமானமும், சபாஹரின் கோனார்க் விமான நிலையத்தில் மற்றுமொரு விமானமும் தரையிறக்கப்பட்டுள்ளதாக லித்துவேனிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களை அடுத்து மூன்றாவது விமானம் லித்துவேனியாவிலிருந்து புறப்படவிருந்த நிலையில் அது தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ஏற்கனவே இவ்வாறு விமானங்களை கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏ340 ரக விமானங்கள் இரண்டு இவ்வாறு அண்மையில் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி சுமார் பல நூறு மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானங்களில் பயணிகள் பயணித்துள்ளனரா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நடு வானில் வைத்து இந்த இரண்டு விமானங்களும் ஈரானுக்கு திசை திருப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு விமானங்களும் கெம்பியாவின் குத்தைகை நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானக் கடத்தல் தொடர்பில் தற்பொழுது சாவதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.