தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாராக என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெண், சுவிஸ் தமிழர்கள் உள்ளிட்ட புலம் பெயர் தமிழர்களிடம் பாரியளவு பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகமொன்றின் இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தான் பிரகாரனின் மகள் எனக் கூறிக் கொண்டு குறித்த பெண் புலம் பெயர் தமிழர்களிடம் பாரியளவு பணம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண் சுவிட்சர்லாந்து தமிழ் சமூகத்தை சில காலமாக ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வேலுப்பிள்ளை பிரகாரன் உயிருடன் இருப்பதாக இந்தப் பெண் கூறிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்திற்காக இவ்வாறு பணம் திரட்டுவதாக கூறி குறித்த பெண் இதுவரையில் பல்லாயிரக் கணக்கான சுவிஸ் பிராங் பணத்தை தமிழ் சமூகத்திடம் மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இந்தப் பெண்ணிடம் 380000 டொலர்களை வழங்கி மோசடியில் சிக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நம்பி பல சந்தாப்பங்களில் பணம் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
தனது நண்பர்களையும் இந்தப் பெண்ணுக்கு பணம் வழங்குமாறு கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.
துர்காவ் கான்டனைச் சேர்ந்த சகாயதாசன் என்பவர் 50,000 சுவிஸ் பிராங்குகளை குறித்த பெண்ணுக்கு வழங்கியுள்ளார்.
தனது பிள்ளை சுகயீனமுற்றிப்பதாகக் கூறி குறித்த பெண் இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மாவீரர் தினத்தில் உரையாற்றிய காணொளி இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பெண் தன்னை துவாரகா பிரகாரன் என அடையாளப்படுத்திக் கொண்டு உரையாற்றியிருந்தார்.
இலங்கையில் வாழ்ந்து வரும் வறிய தமிழர்களுக்கு உதவ புலம்பெயர் தமிழர்கள் இணைய வேண்டுமென கோரியிருந்தார்.
இலங்கையின் முன்னணி ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான டெய்லி மிரர் பத்திரிகை கடந்த ஆண்டு இந்த காணொளி குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி இந்தக் காணொளியை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
துவாராக உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்பட உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது.
இந்த காணொளியில் தோன்றிய பெண் மோசடிகளில் ஈடுபட்ட பெண்ணாக இருக்க வேண்டுமென குறித்த சுவிஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காணொளியை சுவிட்சர்லாந்து யூடியுப் ஊடாக வெளியிட்ட ஜெயபாலன் செல்லய்யா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார்.
ஜெயபாலன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நிதிப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனித் தமிழீழம் தேவை என்றால் பணம் நன்கொடையாக வழங்கப்பட வேண்டுமென நபர் ஒருவர் புலம்பெயர் தமிழரிடம் கோரும் தொலைபேசி குரல் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த மோசடிகளுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுவிட்சர்லாந்து காவல்துறையினர் விசாரணைகள் நடத்தியுள்ளனரா எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து சுவிஸ் ஊடகம் தகவல் வெளியிடவில்லை.