சுவிட்சர்லாந்தில் இந்த கோடை காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் பல சுவிஸ் பிரஜைகள் இத்தாலிக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரலி என்ற காப்புறுதி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 73 வீதமானவர்கள் இந்த கோடை காலத்தில் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்களில் 25 வீதமானவர்கள் இத்தாலிக்கு பயணம் செய்ய விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக பிரான்சிற்கு 17 விதமானவர்களும் ஸ்பெய்னுக்கு 16 வீதமானவர்களும் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் உள்நாட்டில் உள்ள பிரபல இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு 18 வீதமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கோடை காலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கடற்கரையைக் கொண்ட பகுதிகளுக்கு சென்று விடுமுறையை கொண்டாடுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே மலைப் பகுதியான இடங்களுக்கு செல்ல ஆர்வத்தை வெளியிட்டுள்ளனர்.
விமானங்கள் மற்றும் கார்கள் என்பனவற்றின் ஊடாகவே அதிக எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்து பிரஜைகள் பயணங்களையும் மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் விடுமுறைக்காக, சுவிட்சர்லாந்து பிரஜைகள் சராசரியாக 4000 சுவிஸ் பிராங்குகளை போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக செலவிட திட்டமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.