இலங்கை தமிழ் அரசியல் பரப்பில் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக ராஜவிரோதயம் சம்பந்தன் கருதப்படுகின்றார் அன்னார் நேற்றைய தினம் தனது 91 ஆம் அகவையில் இறை பதம் அடைந்தார்.
1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி பிறந்த ராஜவரோதயம் சம்பந்தன், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, குருணாகல் புனித ஆன்ஸ் கல்லூரி, திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி, மொரட்டுவ புனித செபஸ்டியன்கள் கல்லூரி ஆகியனவற்றில் பாடசாலை கல்வியை கற்றார்.
இலங்கை சட்டக் கல்லூரியில் தனது உயர்கல்வியை தொடர்ந்த சம்பந்தன் ஓர் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தன் லீலாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சம்பந்தனுக்கு சஞ்சீவன் செந்தூரன் என்ற இரண்டு மகன்களும் கிரிஷாந்தி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
1956 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியில் சம்பந்தன் இணைந்து கொண்டார்.
கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வி செல்வநாயகம் சம்பந்தனுக்கு 1963 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.
எனினும் அந்த இரண்டு சந்தர்ப்பங்களையும் சம்மந்தன் நிராகரித்திருந்தார்.
பின்னர் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15144 வாக்குகள் பெற்று வெற்றியட்டினார்.
மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்றிற்கு பிரசன்னமாகாத காரணத்தினால் 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சம்பந்தன் தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிட்டது.
பின்னர் 1989 மற்றும் 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் வெற்றியீட்டவில்லை.
பின்னர் 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு, 2010ம் ஆண்டு, 2015ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றில் அங்கம் வகித்துள்ளார்.
2015 செப்டெம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அவர் பதவி வகித்தார், அமிர்தலிங்கத்தை தொடர்ந்து சம்பந்தன் மட்டுமே நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.