வீசா கட்டண அதிகரிப்பு சர்வதேச பயணிகளை பாதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் வீசா நடைமுறைகளை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை சுற்றுலா துறையை பாதிக்கும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக VFS குளோபல் என்னும் நிறுவனத்திடம் வீசா தொடர்பான ஆவணங்களை கையாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதன் போது குறித்த நிறுவனம் கூடுதலான கட்டணத்தை அறவீடு செய்வதாகவும் இதனால் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடையும் எனவும் பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த கட்டண அதிகரிப்பு சர்வதேச பயணிகளை பாதிக்கவில்லை என VFS குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீசா கட்டணம் மற்றும் சேவை கட்டணம் என்பவற்றினால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரியளவு மாற்றம் ஏற்படாது என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கையில் ஹோட்டல்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விதமான செலவுகள் நியாயமான அடிப்படையில் அறவீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வீசா கட்டணத்தின் மாற்றமானது இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற சுற்றுலாப் பயணிகளின் தீர்மானத்தை மாற்றி அமைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
VFS குளோபல் நிறுவன அதிகாரிகளுடன் சுற்றுலாத்துறை சார் தரப்பினர் இதுவரையில் தங்களது கரிசனைகளை வெளிப்படுத்தவில்லை எனவும் தகவல்கள் பரிமாறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு இவ்வாறான தகவல் பரிமாற்றம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.