மத்திய வங்கி பிணைமுறி குறித்த நிதி மோசடியை விடவும் VFS ஒன்லைன் வீசா மோசடி பாரதூரமானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய வங்கி பிண முறி மோசடியை விடவும் பத்து மடங்கு அதிகளவான பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தருவோருக்கான ஒன்லைன் வீசா வழங்கும் போது வீசா ஆவணங்கள் குறித்த பணிகளை வீ.எப்.எஸ் குளோபல் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
ஒன்லைன் வீசா கட்டண அதிகரிப்பு காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதி மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை விடவும் இந்த ஆண்டின் ஆரம்ப காலப் பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வீசா கட்டண அறவீட்டு முறைமை நாட்டின் நிதி ஒழுங்கு சட்டங்களுக்கு புறம்பானது என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிதி மோசடி குறித்து குற்ற விசாரணைப் பிரிவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சபாநாயகர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஹக்கீம் கோரியுள்ளார்.