ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இவ்வாறு நாடாளுமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி நாட்டில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் இவ்வாறு நீதி அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அரசியலில் பதவி வகித்த போதிலும், நாட்டின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில் தமிழ் மக்களிடம் இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக் கலவரம் நாட்டை இருண்ட யுகத்திற்கு நகர்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியல் முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் யோசனையொன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதில் பாதிப்பு கிடையாது என ஆய்வுகளின் மூலம் தெரியவந்த நிலையிலும் அப்போதைய அரசாங்கம் சடலங்களை தகனம் செய்திருந்தது.
இந்த நடவடிக்கைகளுக்காக மன்னிப்பு கோருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.