அரசாங்கத்தின் புதிய ஒன் அரைவல் வீசா முறைமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராவுப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தகவல்கள் அம்பலமாக கூடிய அபாயம் காணப்படுகின்றது என குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த விசா முறைமையை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சட்டமா அதிபர், சுற்றுலா மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர்கள் ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த அன் அரைவல் வீசா முறைமையின் மூலம் பாரிய அளவிலான மோசடி இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சுற்றுலா பயணி ஒருவரிடம் மோசடியான முறையில் 25 டொலர்கள் அறவீடு செய்யப்படுவதாகவும் பாரியளவு நிதியை இந்த வெளிநாட்டு நிறுவனம் பெற்றுக் கொண்டு உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திடம் வழங்கப்படும் தரவுகள் எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
குறிப்பாக சுற்றுலா பயணிகளின் அந்தரங்கத் தன்மை மீறப்படும் வகையில் தகவல்கள் பரிமாறப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரபல நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்திய போதிலும் உண்மையில் வேறு ஒரு நிறுவனமே இந்த ஒன் அரைவல் வீசா வழங்கும் நடவடிக்கையில் தொடர்புபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.