0.7 C
Switzerland
Sunday, December 8, 2024

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு…

Must Read

இலங்கையில் ஒன்லைன் வீசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இணைய வழியில் விசா பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சென்று விமான நிலையத்தில் நேரடியாக வீசா பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை குடிவரவு குடி அகல்வு திணைக்களம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் VFS குளோபல் நிறுவனத்தினால் ஒன்லைன் விசா விசாக்களை பெற்றுக் கொள்வதற்கு வசதி வழங்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் தங்களது நாட்டில் இருந்து இணைய வழியில் வீசா பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் இந்த சேவையை வழங்கும் VFS குளோபல் நிறுவனத்தினர் கூடுதல் கட்டணங்களை அறவீடு செய்வதாகவும் தகவல்கள் வெளியே பகிரப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக பயணிகளின் தகவல்கள் பகிரப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் ஒன்லைன் வீசா வழங்கும் செயல் முறையை VFS குளோபல் நிறுவனத்திற்கு வழங்கிய அமைச்சரவையின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன்படி உடன் அமலுக்கு வரும் வகையில் ஒன்லைன் வீசா வழங்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது, ஒன்லைன் வீசா பெற்றுக் கொள்வதற்கு இணைய வழியில் தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த குளோபல் VFS குளோபல் நிறுவனத்தின் இணையதளம் தற்பொழுது செயலிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு வீசா வழங்கும் 17 வகைகளுக்கு ஒன்லைன் வீசா வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் வீசா பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இந்த நேரடி முறைமையினால் பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடும் எனவும் விமான நிலையத்தில் நெரிசல் ஏற்படலாம் அல்லது பயணிகள் காத்திருக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஈ-விசா வழங்குவதற்கான விண்ணப்பங்களை கையாண்டு வந்த VFS நிறுவனத்திற்கு வழங்கியதன் ஊடாக கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அரசாங்கம் 1.4 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக் கொண்டுள்ளது.

VFS நிறுவனத்திற்கு முன்னதாக இலங்கையின் தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான மொபிடெல் நிறுவனம் இந்த சேவையை வழங்கி வந்தது.

மீண்டும் மொபிடெல் நிறுவனத்திற்கு சேவையை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒன்லைன் வீசா வழங்கும் நடைமுறையில் விசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு VFS க்ளோபல், IVS மற்றும் GBS ஆகிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் விலைமணுக் கோரல்கள் இன்றி  இந்த நிறுவனங்களுக்கு குறித்த ஈ-வீசா வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய ஈ-வீசா வழங்கும் நடவடிக்கைகளிலிருந்து VFS குளோபல் நிறுவனம் விலகிக்கொண்டது.

இதன் படி கடந்த இரண்டாம் திகதி இலங்கை நேரம் மாலை 5 மணியளவில் இந்த இணையதளம் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் சுற்றுலா பயணிகள் நேரடியாக விமான நிலையத்தில் ஒன்அரைவல் வீசாக்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபிடல் நிறுவனம் மீண்டும் இந்த ஒன்லைன் வீசா வழங்கும் நடைமுறையை எப்பொழுது நடைமுறைப்படுத்தும் என்பது பற்றிய சரியான திகதி விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறு எனினும் குடி வரவு குடி அகல்வு திணைக்களத்துடன் நாம் தொடர்பை ஏற்படுத்தி இது குறித்து கேட்டபோது எதிர்வரும் வாரம் அளவில் மொபிடெல் இணையதளம் ஊடாக சேவையை வழங்க முடியும் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பயணிகளுக்கு வீசா வழங்குவதற்காக மொபிட்டில் நிறுவனம் ஒரு டொலரை அறவீடு செய்திருந்தது.

எனினும் VFS குளோபல் நிறுவனம் 10 முதல் 18.5 டொலர்கள் வரையில் வீசா வகைக்கு ஏற்ற வகையில் கட்டணங்களை அறவீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VFS குளோபல் நிறுவனத்திற்கு இந்த வீசா வழங்கும் ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் இலங்கை மத்திய வங்கியில் இடம் பெற்ற பாரிய நிதி மோசடியை விட அதிகளவான மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளும் கட்சி மீது சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒன் அரைவல் ஈ-வீசா தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES