இலங்கையில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 37 வேட்பாளர்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுராகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, பிரபல தொழிலதிபர் திலீத் ஜயவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரிய நேத்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
இன்றைய தினம் நண்பகலுடன் கட்டுப் பணம் செலுத்தும் கால அவகாசம் பூர்த்தியாகின்றது.
மேலும் நாளைய தினம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேர்தலுக்கான செலவுகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.