இலங்கையில் சுற்றுலாத்துறை பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் பயண அங்கீகார முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதனால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனத் தெரிவித்த தொடுக்கப்பட்ட வழக்கினைத் தொடர்ந்து, ஒன்லைன் வீசா வழங்கும் நடவடிக்கையை நீதிமன்றம் இடைநிறுத்தியது.
இதனால் ஒன் அரைவில் முறையில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கான வீசா வழங்கப்பட்டு வருகின்றது.
இலத்திரனியல் பயண அங்கீகார முறைக்கு (ETA) முறைமை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய கால தாமதமானது சுற்றுலாத்துறையை பெரிதும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை சார்ந்த தொழிற்துறையினர் ஜனாதிபதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தெரிவு செய்வதனை தவிர்த்து வேறும் நாடுகளை நோக்கி பயணம் செய்யக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது என ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு இணைய வழியில் வீசா வழங்கும் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திற்கு வீசா விண்ணப்பங்களை கையாள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட முன்னதாக இலங்கையின் மொபிடெல் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொண்டு வந்தது.
எனவே மீண்டும் அந்த நிறுவனத்திடம் குறித்த பொறுப்பினை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஒன் அரைவல் வீசா முறைமையினால் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடுவதாகவும் அது அவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பழைய முறையில் வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள இடர்கள் குறித்து சட்ட மா அதிபர் நீதிமன்றில் விளக்கம் அளிக்க உள்ளார்.
மொபிடெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம் திடீரென இடைநிறுத்தப்பட்டு வீ.எப்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கினால் உடன் இணைய வழியில் வீசா வழங்க முடியும் என மொபிடெல் நிறுவனம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.