அவுஸ்திரேலியாவில் வீட்டுப் பணிப்பெண்ணை அடிமை போன்ற நடத்திய இலங்கை ராஜதந்திரிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
அவுஸ்திரேலிய நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்பராவில் தங்கியிருந்த காலப் பகுதியில் தமக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், வீட்டு எஜமானி அடிமை போன்று நடத்தியதாகவும் இலங்கயைச் சேர்ந்த பிரியன்கா தனரட்ன என்ற பெண் அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருந்திக்கா என்பவருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கன்பராவில் ஹிமாலியின் வீட்டில் பிரியங்கா பணிப் பெண்ணாக கடயைமாற்றியுள்ளார்.
இந்த மூன்றாண்டு காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டிய மொத்த சம்பளத்தில் 3 வீதம் மட்டுமே ஹிமாலியினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பணிப்பெண்ணுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சம்பளக் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்கத் தவறிய ஹிமாலிக்கு, முழுச் சம்பளத்தையும் வட்டியையும் சேர்த்து செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பிரியங்காவிற்கு சுமார் 543000 அவுஸ்திரேலிய டொலர் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியங்காவிற்கு விடுமுறை வழங்கப்படவில்லை எனவும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் வருடாந்த விடுமுறை வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஹிமாலி தற்பொழுது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா காரியாலத்திற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.
பிரியங்காவை, முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் நவீன அடிமையாக நடத்தியுள்ளதாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.