ஒன்லைன் வீசா குறித்த நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துவதனை வேண்டுமென்றே காலம் தாழ்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒன்லைன் வீசா வழங்குவது குறித்த வழக்கு விசாரணை பூர்த்தியாகும் வரையில் பழைய முறையில் வீசா வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் நீதிமன்ற உத்தரவினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரிகள் வேண்டுமென்றே இந்த உத்தரவினை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்லைன் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு வீ.எப்.எஸ் க்ளோபல் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
விலை மனுக் கோரல்கள் எதுவுமின்றி மோசடியான முறையில் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் குறித்த நிறுவனம் சேவை வழங்குவதனை இடைநிறுத்தியதுடன் பழைய முறையில் வீசா விநியோகம் செய்ய உத்தரவிட்டிருந்தது.
வீ.எப்.எஸ் நிறுவனத்திற்கு முன்னதாக மொபிடெல் நிறுவனத்தினால் இந்த இந்த சேவை வழங்கப்பட்டது.
வீசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக பாதிக்கும் என சுற்றுலாத்துறைசார் நிறுவனங்கள் விசனம் வெளியிட்டு வருகின்றன.