அவுஸ்திரேலியாவின் விமான சேவை நிறுவனமான குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் 19000 டொலர் பெறுமதியான விமான டிக்கெட்டை தவறுதலாக 3400 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
மென்பொருளில் ஏற்பட்ட தவறு காரணமாக இவ்வாறு பாரிய அளவு கட்டண குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குவான்டாஸ் விமான சேவையின் முதல் வகுப்பு டிக்கட் ஒன்றின் மூலம் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு சுமார் 19000 டொலர் அறவீடு செய்யப்படுகின்றது.
எனினும் மென்பொருளில் ஏற்பட்ட தவறு காரணமாக 85 வீத கழிவு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 300 பயணிகள் அமெரிக்காவிற்கான விமான பயணத்திற்காக முதல் தர விமான டிக்கெட் ஒன்றை 3400 அமெரிக்க டாலர்களுக்கு பதிவு செய்து கொள்ள முடிந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்ட நேரத்திற்கு இவ்வாறு விமான டிக்கட்டுகளுக்கு சலுகை கழிவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துரதிஷ்டவசமாக இடம்பெற்ற இந்த மென்பொருள் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்களை ஏமாற்ற விரும்பவில்லை என குவான்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அறிவிப்பு செய்பய்பட்ட கட்டணத்திற்கு முதல் வகுப்பு வகுப்பு டிக்கட்டுக்கு பதிலாக பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகளை அந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்க விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு பிசினஸ் வகுப்பு டிக்கட்டை விரும்பாதவர்களுக்கு செலுத்திய கட்டணத்தை மீள செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கான பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வதற்கு சுமார் 11000 டொலர்கள் கட்டணமாக அறவீடு செய்யப்படுகின்றது.
கடந்த ஆண்டிலும் குவான்டாஸ் விமான சேவை நிறுவனத்தில் இவ்வாறான ஓர் நிகழ்வு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.