ஹமாஸ் தீவிரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இஸ்ரேலிய பணய கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்லப்பட்ட ஆறு பேரினது சடலங்கள் ராபா பகுதியில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் குறித்த பணய கைதிகளை கைது செய்து பாலஸ்தீனத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
ரபாவில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது இந்த பணய கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேலிய பணய கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது கொடூரமான தீவிரவாத தாக்குதல் என அவர் ஹமாஸ் போராளிகளை குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹமாஸ் போராளிகளின் இந்த தீவிரவாத செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரபாவில் அமைந்துள்ள நிலக்கீழ் சுரங்கம் ஒன்றில் இந்த ஆறு பேரினது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஹமாஸ் போராளிகள், குறித்த ஆறு பேரையும் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, பணய கைதிகளை மீட்பதில் அரசாங்கம் அசமந்தப் போக்கை பின்பற்றி வருவதாக இஸ்ரேலிய மக்கள் கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக பணய கைதிகளின் உறவினர்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.