எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குதல் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த விடுமுறைகள் என்பனவற்றை இழக்காத வகையில் தங்களது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் 110 ஆம் பிரிவின் கீழ் வாக்களிப்பதற்கு தொழில் தருனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு குறைந்த பட்சம் நான்கு மணித்தியாலங்கள் தேவைப்படும் எனவும் இந்த காலப்பகுதிக்கு சம்பளம் குறைக்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையத்திற்கும் பணியாற்றும் இடத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் விடுமுறை காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைந்த தூரம் என்றால் அரை நாள் விடுமுறை, 40 கிலோமீட்டர் 100 கிலோமீட்டர் இடைப்பட்ட தூரம் என்றால் ஒரு நாள் விடுமுறை 100 முதல் 150 கிலோமீட்டர் இடைப்பட்ட தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை, 150 க்கு கிலோமீட்டர் மேற்பட்ட தூரம் என்றால் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல மூன்று நாட்கள் தேவைப்படும் எனவும் அவ்வாறானவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பணியாற்றுபவருக்கு வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.