இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரியளவு மோசடி இடம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நிலவிவரும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு வரும் மக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.
மேலும் இவ்வாறு காத்திருக்கும் மக்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் நாளொன்றுக்கு 3000 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்ய வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் கேள்விக்கு அமைய அடுத்த ஆண்டு வரையில் இவ்வாறு கடவுச்சீட்டுகளை விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலகின்றது என காண்பித்துக் கொள்ள அரசியல் தரப்பினரும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் முயற்சித்து வருவதாகவும் அவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் துறைசார் அமைச்சின் செயலாளர் ஆகியோரை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் அதிகாரப்பூர்வ பணிக்காக வெளிநாடு செல்லும் போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு காரியாலத்திற்கு எதிரில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம் பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.