பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இரண்டு தசம் இரண்டு மில்லியன் மக்களுக்கு அவசர நிவாரணங்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத் திட்டம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
மிக அவசரமாக பலஸ்தீன மக்களுக்கு உணவு மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
இஸ்ரேலிய படையினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் தொடர்ந்து 12 வது மாதமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களின் காரணமாக இதுவரையில் சுமார் 41000 பலஸ்தீன, மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஒரு பின்னணியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வழங்கிய வருகின்ற போதிலும் இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகளினால் நிவாரண பொருட்களை விநியோகம் செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் நடவடிக்கைகளை சவாலுக்கு உட்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் ட்ரக் கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக சர்வதேச சட்டங்களை மீறி பாலஸ்தீன நிலப்பரப்பில் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அந்தப் பகுதிகளை கைப்பற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகள் அணி திரள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இந்த அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.