இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுரகுமார திசாநாயக்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் நாமல் ராஜபக்சவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்களை தவிர முன்னாள் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, ரோஷன் ரணசிங்க, சரத் போன்சேகா உள்ளிட்ட மேலும் 34 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஓர் முத்தரப்பு போட்டியாக அமைந்துள்ளது என கூறலாம்.
அனுரகுமார திசாநாயக்க சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் போட்டி நிலைமை நீடித்து வருகின்றது.
தேசிய ரீதியில் வெறும் மூன்று வீத வாக்காளர் எண்ணிக்கையைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி இம்முறை தேர்தலில் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு ஒரு வலுவான நிலையை அடைந்துள்ளது.
சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஏனைய பிரச்சார வழிமுறைகளிலும் இம்முறை தேர்தலில் மிகவும் காத்திரமான பிரச்சார அணுகுமுறையை தேசிய மக்கள் சக்தி அனுரகுமார தரப்பு முன்னெடுத்து வருகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை.
தேர்தல் பிரச்சார மேடை அலங்காரம், மக்களின் கூட்டம் சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரச்சாரங்கள் பிரபலங்களின் ஆதரவு என பல்வேறு வழிகளில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு நிலை அதிகரித்துள்ளது.
இதேவேளை, தமிழ் முஸ்லிம் தலைமைகளின் கூடுதல் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு காணப்படுகின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமையிலான மனோ கணேசன், ராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் போன்றவர்களும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ரிசார்ட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும், வடக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றனர்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆளும் கட்சியின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுகின்றது.
பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சி முக்கிய அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் மேடையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசன்ன ரணதுங்க, நிமால் சிரிப்பால டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜீவன் தொண்டமான், காஞ்சன விஜயவர்த்தன உள்ளிட்ட பல அமைச்சர்களும் முன்னணி அரசியல்வாதிகளும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த மூன்று வேட்பாளர்களுக்கும் தேர்தல் கூட்டங்களின் போது கணிசமான அளவு மக்களின் பிரசன்னம் காணப்படுகின்றது.
தேர்தல் கூட்டங்களில் மக்கள் பிரசன்னத்தை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் செய்யப்படும் பிரச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் வெற்றி ஈட்டப் போகும் வேட்பாளர் யார் என்பதை துல்லியமாக அறிவித்து விட முடியாது.
எவ்வாறினும் இம்முறை தேர்தலில் தற்போதைய கள நிலவரங்களின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கான ஆதரவு அதிகரித்துச் செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
இந்த மக்கள் ஆதரவு ஜனாதிபதி தேர்தலில் ஒன்றில் 51 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொள்ள போதுமானதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
சஜித் பிரேமதாசிற்கு தமிழ் முஸ்லிம் தரப்புகளின் ஆதரவு காணப்படும் அதேவேளை, சிங்கள பௌத்த தரப்புகளில் ஆதரவு எந்த அளவிற்கு காணப்படுகின்றது என்பது தெளிவாகவில்லை.
இதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகளின் கடன் நீக்கம், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை பெருந்தொகையில் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான நலத்திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இதனால் மக்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவிற்கும் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் 51 வீத வாக்குகளை எந்த ஒரு வேட்பாளரும் பெற்றுக் கொள்ள தவறினால் விருப்பத்தெரிவு வாக்கு எண்ணப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான மூன்று வேட்பாளர்ளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகின்ற அதேவேளை, அனுரகுமாரவிற்கான ஆதரவு அதிகரித்துச் செல்வதனை மறுப்பதற்கில்லை.