இலங்கையில் எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னிலை வசிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு தகவல் ஒன்றில் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் மிக நெருக்கமான போட்டியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறினும் இந்த மூவரில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றான நம்பர்ஸ் டாட் எல்.கே (numbers.lk) என்ற நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெற்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 43.4 வாக்குகளை பெற்றுக் கொள்வார் என இதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க 29 வீத வாக்குகளை பெற்றுக் கொள்வார் என இதில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 26 வீத வாக்குகளை பெற்றுக் கொள்வார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 13,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்த numbers.lk நிறுவனம் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக் கொள்ளக்கூடிய வாக்கு எண்ணிக்கை தொடர்பில் துல்லியமான தகவல்களை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது