அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் எப்.பி.ஐ உளவுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மத்திய புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ராயன் வெஸ்லி ரூட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உள சுகாதார நிலை குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ரூட், சமூக ஊடகங்களில் ட்ரம்ப ஒரு சர்வாதிகாரி என அடிக்கடி விமர்சனம் செய்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ட்ராம்ப் எதனையும் செய்யக்கூடியவர் அல்ல எனவும் விமர்சனம் செய்திருந்தார்.
ரூட், கடந்த 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தம்மை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை முறியடித்தமைக்காக டிரம்ப் ரகசிய சேவைக்கு நன்றி பாராட்டி உள்ளார்.
இந்த படுகொலை முயற்சி தொடர்பில் கரிசனை வெளியிட்ட நபர்கள் குறித்தும் அவர் நினைவூட்டி நன்றி தெரிவித்துள்ளார்ஃ
இதேவேளை, அரசியல் வன்முறைகளை கண்டிப்பதாக துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையிலான அரசியல் வன்முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கண்டிக்கப்பட வேண்டியது எனவும் இந்த சம்பவம் தம்மை கவலையடையச் செய்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இவ்வாறான வன்முறைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ட்ராம்ப் பாதுகாப்பாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமெரிக்கா புலனாய்வு பிரிவிற்கு நன்றி பாராட்டுவதாகவும் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.