பேஜர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 2800 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலை இஸ்ரேலிய உளவு பிரிவான மொசாட், இஸ்ரேலிய இராணுவம் ஆகியன கூட்டாக இணைந்து நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லாஹ் இயக்கம், இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலை லெபனான் அரசாங்கம் வன்மையாக கண்டித்து உள்ளது.
இஸ்ரேலிய அரசாங்கம் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக லெபனான் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த பேஜர்களை ஹிஸ்புல்லாஹ் இயக்கம் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் இந்த பேஜர்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பேஜர்களில் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளில் சிறிய அளவில் வெடி பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தது எனவும் தொலைவில் இருந்து ஏற்கக் கூடிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பேஜர் தாக்குதலில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் பேராஸ் அபியாட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேஜர்கள் வெடிக்கச் செய்யப்படுவதற்கு முன்னதாக அவை ஒலி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலி எழுப்பியதை தொடர்ந்து அனேகமானவர்கள் அதில் வந்த செய்தியை பார்ப்பதற்காக பேஜர்களை கையில் எடுத்தபோது அவை வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அநேகமானவர்களின் முகம், கண்கள், கை உள்ளிட்ட உறுப்புக்களில் தீக்காயங்கள் மற்றும் பாரதூரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலர் கைகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லெபனானில் சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் நடவடிக்கைகள் துல்லியமாக உளவு பார்க்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி காயிஸ் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த பேஜர்களை ஹிஸ்புல்லா இயக்கம் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது முதல் விற்பனை செய்வது வரையிலான அனைத்து விபரங்களும் உளவு பார்க்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புலனாய்வு தகவல் திரட்டுகைக்கு சிக்காத வகையில் தொடர்பாடல் மேற்கொள்வதற்காக ஹிஸ்புல்லாஹ் இயக்கம் வானொலி அலைகளின் ஊடாக தொழிற்படும் பேஜர்களை கொள்வனவு செய்திருந்தது.
இஸ்ரேல் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வெடித்த பேஜர்கள் தாய்வான் நிறுவனமொன்றினால் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், குறித்த நிறுவனம் அந்த தகவலை மறுத்துள்ளது.