இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஒன்பதாம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பிரதானமாக சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும், முன்னாள் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சரத் போன்சேக்கா, பிரபல தொழிலதிபர் திலீத் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா போன்ற 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இந்த தேர்தல் பொதுவாக இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலை விட சற்று மாறுபட்ட தேர்தலாக அமைந்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களாக வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வந்தனர்.
நேற்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன.
வழமையாக இலங்கையில் நடைபெறும் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாகவே காணப்படும், கடந்த காலங்களில் பிரதான இரண்டு கட்சிகள் அல்லது ஒரு பிரதான கட்சியும் வேறு ஒரு தரப்பில் இருக்கக் கூடிய பொது வேட்பாளர் ஒருவருக்கும் இடையில் தேர்தல்கள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இம்முறை தேர்தல் சற்று மாறுபட்ட வகையில் அமைந்துள்ளது.
அதன்படி இம்முறை தேர்தல் பொதுவாக மும்முனைப் போட்டியாக அமைந்துள்ளது என குறிப்பிட முடியும்.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில், சஜித் மற்றும் அனுர ஆகிய மூவருக்கும் இடையிலான ஓர் முத்தரப்பு போட்டியாக தேர்தல் காணப்படுகின்றது.
இந்தத் தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50% என்ற இலக்கினை எட்ட முடியாது என அரசியல் ஆய்வாளர்களும் புலனாய்வு தகவல்களும் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடத்தக்களவு ஆதரவினை பெற்றுக் கொண்டுள்ளார் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் ஆகியோரும் கடுமையான போட்டியை வழங்கி வருகின்றனர்.
இந்த மூவரின் வெற்றி ஈட்டக்கூடிய வேட்பாளரை நிர்ணயம் செய்யக்கூடிய பிரதான ஏதுக்களாக இம்முறை புதிதாக வாக்களிப்பவர்களின் வாக்குகளும் மிதக்கும் வாக்காளர்களின் வாக்குகளும் அமையப்பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இம்முறை தேர்தலில் வழமை போன்று உலகின் பிரதான நாடுகள் தங்களது செல்வாக்கினை செலுத்தத் தொடங்கியுள்ளன.
மறைமுகமாக சில வேட்பாளர்களுக்கு நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றன.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூடுதல் கரிசனையை கொண்டுள்ளன.
அந்த வகையில் தங்களுக்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் முயற்சிகளில் இந்த நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் அனுரகுமார திசாநாயக்கவிற்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பெருமளவு செலவிடப்பட்டு தேசிய மக்கள் சக்தி பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் அனேக பகுதிகளில் கட்சிக்காரியாலயங்களை அமைத்து பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வந்தது.
கள்வர்களை தண்டிப்போம், புதிய மாற்றம் போன்ற தொனிப்பொருளில் பிரசாரம் செய்யப்பட்டது.
அடுத்தபடியாக சஜித் பிரேமதாச கூடுதலான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார்.
வறுமையை ஒழிப்பதாகவும், இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பிரசாரம் செய்யப்பட்டது.
அதேவேளை ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கமும் தீவிரமான பிரசார யுத்திகளை பயன்படுத்தியுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள், உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஜனாதிபதியின் பிரசார மேடைகளில் வாக்கு திரட்டினர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு, பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டமை உள்ளிட்ட பல விடயங்களை ஜனாதிபதி வலியுறுத்தி பிரசாரம் செய்தார்.
இம்முறை தேர்தலில் துல்லியமாக குறிப்பிட்ட ஓர் வேட்பாளர் வெற்றி ஈட்டுவார் என கணிப்புகளை வெளியிடுவது சாத்தியமில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் வெற்றி வாய்ப்பு ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுரா குமார திசாநாயக்கவிற்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.