5.6 C
Switzerland
Friday, October 4, 2024

அனுரகுமார 42 வீத சஜித் 32 வீத வாக்குகள்: வெற்றியாளர் இரண்டாம் சுற்றில் தீர்மானம்

Must Read

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலை பெற்றிருந்தார், அவருக்கு 42.41% வாக்குகள் கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.62% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.31% வாக்குகளும் பதிவாகியுள்ளது
இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, ”அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்” என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க கூறியுள்ளார்.

”இவ்வாறு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள், போட்டியிலுள்ள வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளதா என்பதை கணக்கிடப்படும்”.

22 தேர்தல் மாவட்டங்களிலும் தற்போது போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமாக கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு கிடைக்கப் பெறும் விருப்பு வாக்குகள், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து அதில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் என தெரிவித்துக்கொள்கின்றேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்
இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

அநுர குமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்
அநுர குமார திஸாநாயக்க – 56,78,887 (40.33%)
சஜித் பிரேமதாச – 43,68,230 (33.62%)
ரணில் விக்ரமசிங்க -23,17,448 (17.92%)
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்திருந்தது.

அதேநேரத்தில், சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் தொடர்கிறார்.
ஒருவேளை, யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காவிட்டால், மக்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தீர்மானிக்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES