இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி 9ம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5634915 பெற்றுக் கொண்டுள்ளதுடன் இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 42.3 வீதமாகும்.
இரண்டாவது இடத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார். அவர் மொத்தமாக 4363035 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 32.76 வீதமாகும்.
மூன்றாம் இடத்தை சுயேட்சி வேட்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நடப்பு ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
அவர் மொத்தமாக 2299767 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் 17.27 வீதமாகும்.
இதேவேளை, எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை கடக்காத காரணத்தினால் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.
இதன் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு மொத்தமாக 5,740,179 வாக்குகளும் சஜித் பிரேமதாசவிற்கு மொத்தமாக 4,530,902 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.
விருப்பு வாக்கு மூலம் அனுரகுமார திஸாநாயக்க இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 9ம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
1958ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தம்புத்தேகமவில் பிறந்த அனுரகுமார திஸாநாயக்க களனி பல்கலைக்கழக பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரதான அரசியல் பிரவாகத்தை தவிர்த்து புதிய சக்தியொன்று உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மரபு ரீதியான அரசியல் நடவடிக்கைகள் கொள்கைகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பின் வெளிப்பாடாக தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியுள்ளது.