6.1 C
Switzerland
Friday, October 4, 2024

இலங்கை நாடாளுமன்றமும், தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் சவால்களும்

Must Read

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழமையானது.

இந்த நிலையில், ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக்குறைந்தது 113 உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் முழுமையாக நான்கு மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமே காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், சட்டமூலமொன்றை சாதாரணமாக நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை அவசியம் என்ற நிலையில், தேசிய மக்கள் சக்திக்கு அவ்வாறான பெரும்பான்மை இல்லை.

அதேவேளை, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் வகையில் எந்தவொரு கட்சியும் தற்போது நாடாளுமன்றத்தில் கிடையாது.

இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி ஆட்சியை கொண்டு நடத்துவது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“தேசிய மக்கள் சக்தியில் தற்போது நான்கு பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேரும் இதற்கு பின்னர் அமைச்சு பதவிகளை பங்கிடப் போகின்றார்கள். அமைச்சின் செயலாளர்கள் ஊடாக தீர்மானங்களை முன்நகர்த்துவார்கள்.

“அமைச்சின் செயலாளர்கள் இந்த நான்கு பேருக்கும் பொறுப்பு சொல்பவர்களாக இருப்பார்கள். அதற்கு பின்னர் 45 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்கள். இந்த காலப் பகுதியில் சட்டமூலமொன்றைக் கொண்டு வந்தாலும், அதனை நிறைவேற்ற முடியாத நிலைமை காணப்படும். ஏனென்றால், தேசிய மக்கள் சக்திக்கு தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை,” என அவர் கூறுகின்றார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள முடியுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

”வெல்ல வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு. தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் கூட்டணி சேராதுள்ள ஒரே கட்சி இந்தக் கட்சி மாத்திரம் தான். இனிவரும் காலத்திலும் தாம் யாருடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட போவதில்லை என இவர்கள் அறிவித்துள்ளார்கள்,” என்கிறார்.

“ஆனால், ஊழல் இல்லாத நல்ல அரசியல்வாதிகள் தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றார்கள். என்னவாக இருந்தாலும் 113 ஆசனங்களை இவர்கள் நாடாளுமன்றத்தில் கைப்பற்ற வேண்டும். ஆனால் அதற்காக வாய்ப்புக்கள் சில வேளை அமையும். ஜனாதிபதியொருவர் வெற்றி பெற்றதன் பின்னர் அவரைச் சூழ்ந்த அரசாங்கங்கள் அமைவது தான் வழக்கமாக இருந்தது.

“57 லட்சம் வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற்றதைப் போன்று, நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் அந்தளவு வாக்குகளை எடுப்பது நிச்சயமாக சவாலாகவே இருக்கும். அப்படியென்றால், ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் வரும்,” என யசி குறிப்பிடுகின்றார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த மற்றும் சிங்கள அரசியல்வாதிகளில் ஊழலற்ற அரசியல்வாதிகளை ஒன்றிணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்ற முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார்.

பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் அமைந்தால் என்ன நடக்கும்?
தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில், அது எப்போது கலையும் என்பது தெரியாது என மூத்த நாடாளுமன்ற செய்தியாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார்.

”இவர்களது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்படும் பட்சத்தில், ஆட்சி கலைக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

“ஒரு சின்ன தவறிழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் கூட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும். அந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிக் கொள்ள 113 இடங்களுக்காக அவர்கள் தொடர்ச்சியாக தம்மை நியாயப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்,” என்கிறார்.

மேலும், “பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்படும் பட்சத்தில், நாடாளுமன்றம் கலைந்து விடும். அந்தளவு நெருக்கடி இருக்கும். தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப இந்த இலகுவாக செல்லும் பயணம் அல்ல,” என்கிறார்.

மேலும் பேசிய அவர், சட்டப்படி தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு 50% வாக்குகள் கூடக் கிடைக்கவில்லை என்கிறார் அவர். அதனால் இது நிச்சயமற்றச் சூழல் என்கிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன, இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் காணப்பட்ட அமைச்சரவை இயல்பாகவே கலைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்க புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியாக நியமிக்கப்படும் ஒருவருக்கு நேரடியாகவே பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் காணப்படுகின்றது.

எனினும், ஜனாதிபதி ஒரு கட்சியிலும், நாடாளுமன்றத்தில் வேறொரு கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்றிருக்கும் போது, பெரும்பான்மை பலத்தைக் கொண்ட கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்.

இந்தநிலையில், அநுர குமார திஸாநாயக்க தனது கட்சியிலுள்ள ஒருவரை இம்முறை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கை வரலாற்றில் எந்தவொரு கட்சியும் எதிர்கொள்ளாத பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமையை எதிர்நோக்கும் என மூத்த நாடாளுமன்ற செய்தியாளர் ஆர்.யசி தெரிவிக்கின்றார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES