இலங்கையில் ஈ வீசா நடைமுறை மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த வீசா திட்டம் மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய பழைய ஈ வீசா முறைமை மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வீ.எப்.எஸ் க்ளோபல் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திடம் இந்த ஈ வீசா கையாளுகை குறித்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இந்த நடைமுறை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியையும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் இந்த நிறுவனம் கூடுதல் கட்டணம் அறவீடு செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க மற்றும் சுமந்திரன் ஆகியோர் அடிப்படை உரிமை மனுவொன்றை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் உடனடியாக வீ.எப்.எஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறும், மொபிடல நிறுவனத்திடம் வீசா வழங்கும் நடவடிக்கைகளை ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தது.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் கடந்த அரசாங்கம் மொபிடெல் நிறுவனத்தின் பழைய முறையை நடைமுறைபடுத்தவில்லை.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று சில தினங்களில் பழைய ஈ வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டவர்கள் https://eta.gov.lk/slvisa/ என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து வீசா பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நள்ளிரவு முதல் இந்த இணைய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.