6.1 C
Switzerland
Friday, October 4, 2024

இலவச வீசா வழங்கும் நடைமுறையில் தாமதம்!

Must Read

இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் 35 நாடுகளுக்கு இலவச வீசா வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த இலவச வீசா நடைமுறை இந்த மாத ஆரம்பத்தில் அமுல்படுத்தப்படவில்லை.

மேலும் அண்மையில் மீள அறிமுகம் செய்யப்பட்ட இலத்திரனியல் வீசா அனுமதி முறை தேவையை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் எனவும் கட்டணங்கள் தொடர்ந்தும் அறவீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் 35 நாடுகளுக்கு இலவச வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த இலவச வீசா நடைமுறையானது ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

நீண்ட காலமாக காத்திருந்த பயணிகளும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களும் இந்த வசதிக்காக காத்திருந்த போதிலும் இந்த வசதி முதலாம் திகதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்கம் வெளியிட்ட இலவச வீசா நடைமுறை பயணிகளுக்கும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

கடந்த காலங்களில் கோவிட் பெருந்தொற்று, அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் வீசா பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு ஏதுக்கள் காரணமாக இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி இருந்தது.

இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலா துறையின் மூலம் பாரியளவு வருமானம் கிடைக்கப் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 35 நாடுகளுக்கு இலவச வீசா நடைமுறையை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது.

அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெல்ஜியம், பெலாரஸ், ​​கனடா, சீனா, செக் குடியரசு, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், கசகஸ்தான், மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், போலந்து, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு இலவச வீசா வழங்கப்பட்டது.

புதிய பாராளுமன்றத்தின் அனுமதியின்றி இலங்கைக்கு இலவச வீசா வழங்க முடியாது

நடைமுறையில் இருந்த  இலத்திரனியல்-வீசா முறை சுமார் 2 மாதங்களாக செயலிழந்திருந்த நிலையில், பழைய ETA மின்னணு பயண அங்கீகார சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் புதிய வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் ஆகிய மூன்று பேர் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விஜித ஹேரத் இலவச விசா கொள்கை ஏன் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதை ஊடகங்களிடம் தெளிவுபடுத்தினார்.

35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற முடியாத காரணத்தால் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்த போதிலும், இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது” என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் தற்போது கூட்டத் தொடர் நடைபெறாததால், நாடாளுமன்றம் இயங்காமல் மாற்று வழிகளைக் கண்டறிய சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே தீர்வு கிடைக்கும் வரை அல்லது புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை தாமதம் தொடரும் என எதிர்பார்பபதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்பொழுது ETA வீசா மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த 35 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு இலவச வீசாக்கள் இல்லை, மேலும் இலங்கைக்கு வருகை தர விரும்பும் பயணிகள் வருவதற்கு முன்னர் மின்னணு பயண அங்கீகாரத்தைப் (ETA) பெறுவதற்கும், பணம் செலுத்துவதற்குமான தேவைக்கு இணங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

e-Visa இடைநிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ETA அமைப்பு, பயணிகள் www.eta.gov.lk இணையதளத்தில் பொதுவாக சுற்றுலா, வியாபாரம் அல்லது ட்ரான்ஸிட் ஆகிய பிரிவுகளில் புறப்படுவதற்கு முன்பாக இணைய வழயில் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது.

ETA பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது, இதற்காக 50 அமெரிக்க டொலர்கள் (US$50) (வங்கி கட்டணங்கள் தவிர்த்து) செலவாகும் மேலும் சில மணிநேரங்களில் இதனை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது, ​​சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், மலேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகள் மட்டுமே ETA கட்டமைப்பின் ஊடாக இலவச வீசா பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES