ஈரானுக்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இஸ்ரேல் தூதுவர் டானி டானொன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து இஸ்ரேல் அமைச்சரவை ஆராய்ந்து வருவதாகவும் வெறுமனே வேடிக்கை பார்க்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரான் படையினர் இஸ்ரேல் மீது தீவிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தனர்.
சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுக்கு மிகவும் வலுவானதும் வேதனைக்குரியதுமான பதிலடி விரைவில் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் போர் ஆற்றல் தொடர்பில் ஈரானுக்கு நன்றாக தெரியும் எனவும் மத்திய கிழக்கின் எந்த ஒரு இடத்தையும் அடையக்கூடிய திறன் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது என்பதையும் எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதையும் நாமே தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கம் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதனை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு தடுக்க தவறினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரை வியாபிப்பதற்கு இஸ்ரேல் விரும்பவில்லை என்ற போதிலும் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பாரிய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரானுடன் பூரண போருக்குச் செல்ல விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராகவும் லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதல்களின் மூலம் எங்களது பலத்தை நிரூபித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கம் பெய்ரூட்டிலும் காசாவிலும் என்ன நடந்தது என்பதை தேடிப் பார்க்க வேண்டும் எனவும் இஸ்ரேலுடன் போரை தொடங்குவதற்கு முன்னர் இது குறித்து அறிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இஸ்ரேலிய பிரதிநிதி டானி டெனோன் தெரிவித்துள்ளார்.