இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று முன்னெடுத்து வருகின்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை ஆட்சியை முன்னெடுத்து வருகின்றது.
இந்த புதிய அரசாங்கத்தினால் பல்வேறு சவால்கள் வெற்றி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
சர்வதேசத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டிய அதேவேளை, உள்நாட்டில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டியுள்ளது.
குறிப்பாக ஊழல் ஒழிப்பு, வீண் விரயத்தை தவிர்த்தல் போன்றன தொடர்பில் அரசாங்கம் தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்து வந்தது.
அந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இதுவரையில் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவருக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நீதிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் காணப்படுவதாக நாணய நிதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறெனினும், வழங்கப்பட்ட உறுதி மொழிகளுக்கே அமைய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார கொள்கை அமுலாக்கம் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் பாதிப்புக்களையும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜூலி கொசாக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனினும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பான மூன்றாம் மீளாய்வு விரைவில் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வீண் விரயத்தை தவிர்க்கும் நோக்கில் அண்மையில் அரசாங்கம் கடந்த அரசாங்கம் பயன்படுத்திய வாகனங்களை காலி முகத் திடலில் காட்சிப்படுத்தி இருந்தது.
எனினும், இந்த வாகனங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தாக தென்படவில்லை.
இதேவேளை, இலங்கையில் பொது தேர்தல் நடைபெற உள்ளது எதிர்வரும் நவம்பர் மாதம் 14-ம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பொது தேர்தலிலும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்பொழுது அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பங்களை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு வேட்பாளர் பதவிக்காக சுமார் 50 பேர் வரையில் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த கட்சிகள் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியான ஆதரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிவிவகார செயலாளர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கை விஜயம் செய்ததுடன், புதுடெல்லிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் முதல் விஜயமாக இந்திய விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா , ஜப்பான் சீனா உள்ளிட்ட பலவேறு நாடுகள் தங்களது ஆதரவினை வழங்குவதாக இலங்கை ஜனாதிபதிக்கு உறுதிமொழி வழங்கியுள்ளனர்.
ராஜதந்திர ரீதியில் பலம்பொருந்திய நாடுகளின் அதிகாரப் போட்டிகளை சமாளிக்கவும், சர்வதேச நாணய நிதியம், கடன் கொடுனர்கள் உள்ளிட்ட நம்பிக்கையை வென்றெடுக்கவும் அனுரகுமார அரசாங்கம் அயராது உழைக்க வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் இலங்கையின் ஊழல் அரசியல் கலாசாரத்தை களையும் ஹிமாலய இலக்கும் அரசாங்கத்திற்கு உள்ளது.
பல்வேறு இலக்குகளை எவ்வாறு இந்த அரசாங்கம் வெற்றிகெள்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.