எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் திண்டாட்ட நிலை உருவாகியுள்ளது.
வடக்கின் பிரதான கட்சியாக கருதப்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் பெரும் சவால்கள் எதிர் நோக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து வகையான பொறுப்புக்களில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விலகிக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை சிவஞானம் ஸ்ரீதரன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் சட்டத்தரணி சுமந்திரனுக்கும் ஸ்ரீதரனுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பொது தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது ? வேட்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்வது? என்பது தொடர்பில் பெரும் நெருக்கடி நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்நோக்கி வருகின்றது.
கூட்டணி கட்சிகளுக்கு இடையில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பிலும், பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பிலும் படித்த இளைஞர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்குவதிலும் தெளிவான திட்டங்கள் எதுவும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
கட்சியின் ஒரு சில தலைவர்கள் எதேச்சாதிகார போக்கில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தமிழ் மக்களையும், கட்சியையும் பெரிதும் பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக சட்டத்தரணி சுமந்திரன் கட்சியின் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய நகர்வுகளை மேற்கொள்வதாக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே இம்முறை பொது தேர்தலில் படித்த இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரபு ரீதியாக அரசியலில் களம் கண்டவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றமை காண முடிகின்றது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அரசியலுக்கு விடை கொடுத்துள்ளனர்.
கருணா அம்மான் போன்றவர்கள் இம்முறையயும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த வெற்றி நிலைமையானது பொது தேர்தலில் வடக்கு கிழக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு ஆசனங்கள் கிடைக்கப் பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.