இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மேலும், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) ஆகியவற்றின் ஊடாக நிதி உதவி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
நல்லாட்சிக்காக வழங்கக்கூடிய எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கும், இலங்கையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான போது ஆதரவை வழங்குவதற்கும் அமெரிக்கா தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.