இலங்கையில் முக்கிய அரசியல்வாதிகள் பலர் இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நாளைய தினம் நண்பகலுடன் பூர்த்தியாகின்றது.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் நீண்ட காலம் செல்வாக்கு செலுத்திய பல தலைவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்னளர்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஸ்ட அமைச்சர், ராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பிக்க ரணவக்க, லக்ஸ்மன் கிரியல்ல, விமல் வீரவன்ச, மஹிந்த யாபா அபேவர்தன போன்ற பல்வேறு முக்கியஸ்தர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் நிகழாத ஒர் சம்பவமாக இந்த விடயம் கருதப்படுகின்றது.
இலங்கை அரசியல் கட்மைப்பின் அதிஉயர் பதவியாக கருதப்படும் ஜனாதிபதி பதவியை வகித்ததன் பின்னரும், மஹிந்த, மைத்திரி போன்றவர்கள் நாடாளுமன்ற அரசியலை தொடர்ந்தும் நீடித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக இலங்கையில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் நீரோட்டம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
அதன் ஓர் கட்டமாக அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ரீதியில் வெறும் 3 வீத வாக்குப் பலத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் பரப்பிலும் இந்த மாற்றத்தின் தாக்கத்தை காணக்கூடியதாக அமைந்துள்ளது.
சில முக்கியஸ்தர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
எனினும், மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான சில வடக்கு கிழக்குத் தமிழ்த் தலைவர்கள் இம்முறையும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நாளைய தினம் நண்பகல் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.